கலை பயணம்...

இன்றைய இளைஞர்கள், மாணவ−மாணவியர்கள் பெரும்பாலும் தன்னம்பிக்கை அற்றவர்களாக உள்ளனர். இந்தநிலை மாற்றப்பட்டு அவர்களை தன்னம்பிக்கை உடையவர்களாக மாற்றுவதோடு தன்னை தற்காத்துக் கொள்வதற்காகவும், தமிழனின் பாரம்பரியம் காக்கவும், ஏழை எளியவர்களுக்கு நமது கலையை கொண்டு செல்லவும் உலகம் முழுமையிலும் இக்கலையை கொண்டு செல்லவும், இக்கலையை கற்றுதரும் ஆசான்களை பெருமை படுத்திடவும், பலஆசான்கள் இக்கலையை கற்று முடங்கி கிடப்பதை மாற்றி இச்சிலம்பக்கலையை அவர்களும் முன்னெடுத்திட உதவிடவும், லிங்கம் சிலம்பம் பயிற்சிபள்ளி ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கமாகும்.
மேலும் வரும்காலங்களில் சிலம்பம் கற்று வரிய நிலையில் கல்லூரி போன்றவைகளில் கட்டணம் செலுத்தமுடியாமல் படிப்பினை பாதியில் விடும் நிலையில் உள்ள வீரர்- வீராங்கனைகளுக்கு அவர்கள் கல்லூரி கட்டணம் செலுத்தி பட்டபடிப்பினை தொடர்வதற்கும் உதவிகள் புரிந்திட எங்கள் லிங்கம் சிலம்பம் பயிற்சி பள்ளி எதிர்கால நோக்கமாக மேற் கொண்டுள்ளது. இது போன்ற பல நோக்கங்கள் நிறைவேற்றிட முன்வரும் நல் இதயங்களை இணைத்து மேலும் பல உதவிகளை சிலம்ப மாணவ-மாணவிகளுக்கு வழங்குவதும் எங்களின் எதிர்கால நோக்கமாக முன்வைத்து லிங்கம் சிலம்ப பயிற்சி பள்ளி பயணிக்கிறது.
விருதுகள்...
உருவாக்கம்...

சென்னை மேற்க்கு மாம்பலத்தில் சிலம்பத்திலும் குத்துச் சண்டையிலும் பல மாணவர்களை உருவாக்கியவர். அவர்களில் நானும் ஒருவன். உருவுகண்டு எள்ளாமை வேண்டும் என்ற குறலுக்கு சொந்தக்காரர். குள்ள உருவம் ஆனால் சிலம்ப வகைகளில் அனைத்தையும் அறிந்தவர் ஆனாலும் இருமாப்பு கொள்ளாதவர். சார்பாட்டா பரம்பரையின் சிலம்ப சுழற்றுக்களை எங்களுக்கு அளித்த
ஆசான் திரு. ஜம்புலிங்கம் அவர்கள்.
அவர் சிலம்ப வகைகள் பலவற்றைக் கற்றிருந்தாலும் "நான் கற்க வேண்டியவை ஏராளம்" என தமது மாணவர்களுக்கு கூறுவார். அவர்தான் எனது ஆசான்.
நான் பிறந்தது சோழங்கநல்லூர் எனினும் வளர்ந்தது மேற்கு மாம்பலம். 1974ல் எனது ஆசான் திரு.ஜம்புலிங்கம் அவர்களின் சிலம்ப வகுப்பில் சேர்ந்தேன். 1977ல் என்னால் சிலம்ப வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டது. இன்றுவரை பல நிலைகளை கடந்து 30க்கும் மேற்பட்ட அகில இந்திய அளவில் தேர்ச்சி பெற்ற சிறந்த ஆசான்களையும், சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர்களையும் கொண்டு நடத்தி வருகிறோம். ஆரம்ப கால கட்டத்தில் பெயர் வைக்காமல் நடத்திவந்த இப்பள்ளிக்கு கடந்த 2017ல் தான் எமது ஆசானின் நினைவாக லிங்கம் சிலம்பம் பயிற்சி பள்ளி என பெயர் சூட்டப்பட்டு தமிழ்நாடு அரசின் பதிவு சான்றும் (பதிவு எண்.702/2017) பெற்றுள்ளோம்.
இன்று லிங்கம் சிலம்ப பயிற்சி பள்ளி சோழங்கநல்லூரை தலைமையிடமாக கொண்டு இயங்கிவந்தாலும், சென்னை காஞ்சிபுரம் மற்றும் தமிழகம் முழுதும் பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது. பல பள்ளிகளிலும் தகவல் தொழில் நுட்ப தொழிற்சாலைகளிலும் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றது.
எமது சிலம்ப பயிற்சிபள்ளின் நோக்கமே நமது குழந்தைகளுக்கு உடல்வலிமை பெறவைப்பதோடு அல்லாமல் நல்ல மனத்தெளிவையும் இன்றைய சூழலை எப்படி எதிர் கொள்வது என்பதையும் வகுப்பில் மைய பாடமாக இணைத்து நடத்தப்படுகிறது. உடல் வலிமையோடு மனவலிமையும் பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது. மேலும் எம்பள்ளியில் சிலம்பம் பயிலும் மாணவ மாணவியர் பலர் மாவட்ட - மாநிலபோட்டிகளில் கலந்து கொண்டு வெற்றிகளை பெற்று வருகின்றனர்.
தவிர எம்பள்ளியின் மூலமாக ஆண்டுக்கு ஒரு முறை திறனறிவு தேர்வு நடத்தி பட்டய சான்றும் அளிக்கபடுகிறது.
எமது ஆசான்கள் அனைவரும் பொறியியல் மற்றும் இளங்கலை முதுகலை பட்டம் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.